டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகளில் வாகன ஒலிப்பான்களுக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்போவதாகவும், தற்போதைய ‘ஹார்ன்’ ஒலிக்குப் பதில் புல்லாங்குழல், தபேலா, வயலின், ஹார்மோனியம் இசையை ஒலிக்கச் செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தற்போதைய நகரமயமாக்கல் சூழ்நிலையில், வாகனங்களின் இரைச்சல் மற்றும் தொடர்ந்து காரணமே இல்லாமல், எரிச்சலூட்டும் வகையில் வாகனஓட்டிகள் ஒலி எழுப்பும் விதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சலிப்படையவே வைக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வாகனங்களின் ஒலிக்குப் பதில் இந்திய இசைக் கருவிகளின் இனிய இசை ஒலிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப் போவதாக மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பே காது குளிரும் இசையாக அமைந்துள்ளது.
காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்து துறையின் பங்கு 40 சதவீதம் என்றும், காற்று மாசுபாட்டைக் குறைக்க மெத்தனால், எத்தனால் பயன்படுத்துதல் மற்றும் பசுமை வாகனங்களை ஊக்கப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய வாகனச் சந்தை 2014ல் 14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், ஜப்பானை ஓரங்கட்டி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளதையும் பெருமையாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற வளர்ச்சியில் பெருமைப்படும் அதேநேரத்தில் அந்த வளர்ச்சியின்மூலம் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இப்போதே எடுப்பது எதிர்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தற்போது இந்தியாவில் 26 கோடி இருசக்கர வாகனங்களும், 5 கோடி கார்களும் பதிவு செய்யப்பட்டு சாலைகளில் ஓடிக் கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கான பொறுப்புகளும் அதிகரிப்பதை அனைவரும் உணர வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை முறையாக பராமரித்தல், கழிவுநீர் நுழைவுகளை சாலையின் நடுவே பொருத்தமற்ற முறையில் உயரமாகவோ, பள்ளத்திலோ அமைத்தல், பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களை மாதக்கணக்கில் அப்படியே போட்டு வைத்தல், புதிய சாலை போடப்பட்ட சிலமாதங்களுக்குள் தோண்டுதல் போன்ற முறையற்ற செயல்களால் மக்கள் வரிப்பணம் விரயமாவதுடன், வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்; காயமடைகின்றனர். வாகன இரைச்சலைக் குறைத்து இசையாக மாற்றும் மத்திய அரசின் புதிய முயற்சி பாராட்டுக்குரியதே.
அதேநேரம், பெருநகரங்கள் மட்டுமின்றி சிறுநகரங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி நேரத்தையும் எரிபொருளையும் வீணடிப்பதுடன், வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையே சாலைகளில் தற்போது நீடிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சாலை கட்டமைப்புகளை போக்குவரத்து நெரிசல் இல்லாதவகையில் மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியதும் காலத்தின் கட்டாயம்.