Site icon Metro People

சூடானில் இனக்குழுக்களிடையே மோதல்: 100 பேர் பலி – ஐ.நா. தகவல்

கார்தும்: சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். சூடான் நாட்டின் பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் சூடானில் ஆட்சியை கைபற்றியது.

இதனை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் தற்போதுவரை ராணுவமே சூடான் அரசை நிர்வகித்து வருகிறது.

இதனையடுத்து அங்கு அவ்வப்போது இனக் குழுக்களுக்கு இடையேயான மோதல் வலுத்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாகவே மோதல்கள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டார்ஃபூரில் கடந்த ஒரு வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது. மோதல் காரணமாக சுமார் 5,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வன்முறை காரணமாக 20 கிராமங்கள் தீக்கிரையாகி உள்ளன. இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறை உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் நிறைய உயிர்கள் பலியாக நேரிடும். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது அங்குள்ள அனைத்து சமூகத்துக்கு தீமையாக முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் ஏப்ரல் மாதம் நடந்த மோதலில் 150க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version