புதுடெல்லி: உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா போட்டி போட்டு வரி உயர்வை அறிவித்து வருவது வர்த்தகப் போரின் தன்மையை தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி 84 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக சீனா நேற்று அறிவித்தது. உலக நாடுகளுக்கான வரி விதிப்பு விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐரோப்பிய யூனியனுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்று சீனா தெரிவித்துள்ளது.
அதேபோன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வாரத்தில் சீன பொருட்களின் இறக்குமதிக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி வரி விதிப்பு வர்த்தகப் போரை மேலும் மோசமாக்கியுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வரி விதிப்பின்படி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களை எங்களது சந்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. எனவே, அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது புறந்தள்ளக்கூடிய ஒன்று என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா மீது அமெரிக்கா அசாதாரணமாக அதிக வரிகளை விதிப்பது பொருளாதாரத்தில் நடைமுறை முக்கியத்துவம் இல்லாத எண்களின் விளையாட்டாக மட்டுமே மாறியுள்ளது. வரி விதிப்பு எண் விளையாட்டை அமெரிக்கா தொடர்ந்து விளையாடினால் அதனை சீனா புறக்கணிக்கும் என்று சீன செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்பின் கட்டுப்பாடற்ற வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பிடமும் முறையி்ட்டுள்ளதாக சீனாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.