‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவுக் குரல்

மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதன் காட்சிகள் இந்துக்களை புண்படுத்துவது போன்று இருப்பதாக பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து படத்தின் சில காட்சிகளை நீக்கி, மறு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து சுமார் 17 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சைக் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “‘எம்புரான்’ படத்துக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது. சர்வாதிகாரத்தின் அடையாளங்களுக்கான எதிர்ப்புகளை அடக்குவதற்கு, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் பயன்படுத்தப்படும்,

வளர்ந்து வரும் போக்கின் மற்றொரு எடுத்துக்காட்டு இது. அச்சத்தின் மூலம் படைப்பு சுதந்திரத்தை நசுக்குவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை; அதைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘எம்புரான்’ படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ப்ருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘எம்புரான்’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை ஈட்டி வருகிறது.