Site icon Metro People

ஆயுர்வேத படிப்புகளுக்கான காலியிடங்களை கவுன்சிலிங் இன்றி நிரப்பியதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்

ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் காலியாக இருந்த இடங்களை சில தனியார் மருத்துவ கல்லூரிகள் தாமாக முன்வந்து நிரப்பின. ஆனால் இதனை ஏற்க மறுத்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் கவுன்சிலிங் நடத்தாமல் நிரப்பப்பட்ட இடங்கள் சட்டவிரோதம் என தெரிவித்தது.

இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலந்தாய்வு மற்றும் மறு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவப் படிப்புக்கு மட்டுமே பொருந்தும். ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கல்லூரிகள் தங்களது எல்லைக்குட்பட்டே செயல்பட்டுள்ளன.

எனவே மாணவர் சேர்க்கை செல்லும் என தெரிவித்துள்ள நீதிபதி, வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டுமென்றும், ஏற்கெனவே தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version