பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணி அளவில் பாங்காக் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், தாய்லாந்துவாழ் இந்தியர்கள் அதிக அளவில் திரண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், வேத மந்திரங்களை ஓதியும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
புதுடெல்லியில் இருந்து புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடுத்த மூன்று நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்த நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க உள்ளேன்.
இன்று மாலை பாங்காக்கில், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்து, இந்தியா-தாய்லாந்து நட்புறவின் முழு வீச்சு குறித்து விவாதிப்பேன். நாளை, பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பேன். மேலும் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னையும் சந்திப்பேன்” என தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், “இலங்கைக்கான எனது பயணம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் நடைபெறுகிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்திய-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிப்போம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளை நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், நேபாள பிரதமர் சர்மா ஒலி, மியான்பர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் மோடியும் முகம்மது யூனுஸும் பாங்காக்கில் நாளை நண்பகல் அளவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்நாட்டில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா தனது கவலைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. அதேபோல், வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதற்கு வங்கதேச அரசு தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
வங்கதேச தலைமை ஆலோசகராக பதவியேற்ற உடன் முகம்மது யூனுஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் புதுடெல்லியின் அழைப்பு இல்லாததால் அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டதாகவும் சமீபத்தில் அதன் வெளியுறவுச் செயலாளர் ஜாஷிமுதீன் சமீபத்தில் கூறி இருந்தார். இதபோல், நேபாள் பிரதமர் ஷர்மா ஒலிக்கும் இந்தியா அழைப்பு விடுக்காததால் அவரும் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார். அவரும் பிரதமர் மோடியை பாங்காங்கில் சந்திப்புப் பேசுவார் என கூறப்படுகிறது.
இதேபோல், பிரதமர் மோடி மற்றும் மியான்மர் ராணுவ ஆட்சியின் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கிற்கும் இடையிலான சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இது உறுதிப்படுத்தப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவ ஆட்சி தலைமையுடன் நடக்கும் மற்றொரு முதல் சந்திப்பு இதுவாகும். கடந்த வாரம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடக்கத்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டுக்கு உதவும் நோக்கில் ஆபரேஷன் பிரம்மா எனும் திட்டத்தை இந்தியா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.