சுஜாதா ராவுத் கார்த்திகேயன்: பெண்களுக்கு அதிகாரம் அளித்த ஆட்சியர்!

டிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரது தனிச் செயலாளராகவும் திறமையாக பணியாற்றியதால் மாநிலம் முழுவதும் அறியப்பட்டவர் தமிழரான வி.கே.பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியான இவர், அரசியலில் இணைவதற்காக தனது அரசு பதவியை 2023-ல் ராஜினாமா செய்தார்.

வி.கே.பாண்டியனின் மனைவியான சுஜாதா ராவுத் கார்த்திகேயனும் ஐஏஎஸ் அதிகாரிதான். கணவரின் அடியொற்றி சுஜாதாவும் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது அரசியல் களத்தில் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. யார் இந்த சுஜாதா ராவுத் கார்த்திகேயன்?

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியலும் ஜே.என்.யூவில் முதுகலை சர்வதேச அரசியலும் படித்த சுஜாதா, டெல்லி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தவர். ஐஏஎஸ் அகாடமியில் தங்க பதக்கம் வென்ற இவர், கடந்த 2000-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

மதுரையின் மருமகள்: மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை 2001-ல் சுஜாதா திருமணம் செய்துகொண்டார். நக்சல்கள் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சுந்தர்கர் மாவட்ட ஆட்சியராக அவர் பொறுப்பேற்றார். கடந்த 2005 காலக்கட்டத்தில் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பழங்குடியின மாணவிகள் பலர் எட்டாம் வகுப்புக்கு பிறகு படிப்பைத் தொடர முடியாத நிலை இருந்தது.

ஆட்சியர் சுஜாதா, வங்கி நிதி உதவி மூலம் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்தார். இது மாணவிகள் பள்ளிப் படிப்பை தொடர்வதை சாத்தியமாக்கியது. இந்தத் திட்டம் பின்னர் மாநில அரசால் ஒடிசா முழுவதும் அமல் செய்யப்பட்டது.

கால்பந்து கலெக்டர்: ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டி அமைந்த ஒடிசா கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வன்முறை பாதைக்கு மாறுவதை சுஜாதா கண்காணித்தார். அவர்களை விளையாட்டில் ஈடுபட வைப்பதற்காக இளைஞர்களுக்கு கால்பந்துகளை விநியோகித்தார்.

இதனால், ‘கால்பந்து கலெக்டர்’ என மக்கள் அவரை புகழ்ந்தனர். கால்பந்துகளோடு, ஹாக்கி மட்டைகளையும் அவர் வழங்கினார். ஹாக்கி வீராங்கனைகளுக்காக விடுதிகளை அமைத்து, ஆடுகளமும் அமைத்து தந்தார். சைக்கிள் வழங்கியதன் மூலம் கல்வியும், கால்பந்து வழங்கியதன் மூலம் விளையாட்டும் ஊக்குவிக்கப்பட்டது. இவை இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயலாகப் பார்க்கப்பட்டது.

வாரம் ஒரு முட்டை: கடந்த 2006-ல் சுந்தர்கர் பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தில் நெய், பருப்பின் அளவை அதிகப்படுத்துவதற்கு பதிலாக வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டத்தை சுஜாதா அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக், வாரம் ஒரு முட்டை திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

கட்டக் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் சுஜாதா. மாநில அரசில் மாவட்ட சமூக நலத்துறை இயக்குநராக அவர் பணியில் சேர்ந்தார். அப்போது மம்தா மகப்பேறு நலத்திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். இந்த திட்டம், இந்திரா காந்தி மகப்பேறு நலத்திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது. இதன்மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உறுதி செய்யப்பட்டது.

நிதியுதவி பெறுவதில் அரசு தரப்பு குறைபாடு, ஊழலை களையும் வகையில் பெண்கள் சுயகையொப்பமிட்ட படிவத்தைக் கொடுத்தால் போதும் என்ற நடைமுறையை சுஜாதா அமல்படுத்தினார். இன்றளவும் ஒடிசாவில் இளம் அம்மாக்கள் மத்தியில் மம்தா திட்டம் பிரபலமாக இருக்க அவர் ஏற்படுத்திய இந்த மாற்றமே முக்கிய காரணம்.

மிஷன் சக்தி திட்டம்: பல ஆண்டுகளாக ‘மிஷன் சக்தி’ திட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக் கொண்டு வந்த இந்த முன்னணி திட்டம், சுஜாதாவின் வழிகாட்டுதலில் 70 லட்சம் பெண்களின் இயக்கமாக வளர்ச்சி அடைந்தது. பெண்கள் மத்தியில் தொழில்முனைவை ஊக்குவிக்க, சிறு, குறு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் சுஜாதா அறிமுகப்படுத்தினார்.

அரசின் செயல்பாடுகளை மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் தொடர்புபடுத்தியது அவரின் மற்றுமொரு தனித்துவமான நடவடிக்கை. மின் கட்டணம் வசூல், சாலை அமைப்பது, கொள்முதல், நர்சரி பயிற்சி, பொது உள்கட்டமைப்பு பராமரிப்பு, லட்சுமி பஸ்கள் இயக்கம், சக்தி கஃபேக்கள் நடத்துவது உள்ளிட்ட அரசு பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான பெண்கள் ஈடுபட்டனர். இதன்காரணமாக 5 ஆண்டுகளில் அரசுப் பணிகள் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.11,000 கோடி ஆகும்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் மிஷன் சக்தி திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்த மாநிலம் முழுவதும் சக்தி பஜார்கள் அமைக்கப்பட்டன.

இ- காமர்ஸ் தளங்களுடன் இணைந்து புவனேஸ்வரத்தில் பொட்டிக் அமைக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த கடையைப் பார்வையிட்டு நகர்ப்புற பகுதியில் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை பாராட்டினார்.

கலாச்சார செயலாளராகப் பதவி வகித்த சுஜாதா, புவனேஸ்வரத்தில் முதல் உலக ஒடியா மொழி மாநாட்டை நடத்தினார். உலகம் முழுவதும் உள்ள ஒடியா மொழி ஆர்வலர்கள், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் நடந்த இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்த்துவதாக சுஜாதா ராவுத் கார்த்திகேயனின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்தது.