சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிவேகமாக இருப்பதால், திடக்கழிவு மேலாண்மை என்பது சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது. மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மை கொள்கை கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.
அதில், திடக்கழிவுகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்துவது, பொதுமக்களின் பங்கு, உள்கட்டமைப்பு வசதி போன்றவை, தற்போது பெரும் சவாலாக உள்ளன. இதுகுறித்து, கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச்செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தூய்மை இயக்கத்தை தொடங்கலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த மார்ச் 27-ம் தேதி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘தமிழகத்தில் உள்ள நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், தூய்மை இயக்கத்தின் நோக்கம், செயல்பாடுகள், எய்த வேண்டிய இலக்குகள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்கத்துக்கான நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இந்த நிர்வாக அமைப்பின் தலைவராக முதல்வர், துணைத்தலைவராக துணை முதல்வர் ஆகியோர் இருப்பார்கள்.
மேலும், நீர் வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நிதி, சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரத் துறைகளின் அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த அமைப்பு, இதற்கான விரிவான கொள்கையை உருவாக்குவதுடன், பல்வேறு துறைகளில் இருந்து நிதியை பெறுவதற்கான உதவியையும் செய்யும். மேலும், இயக்கத்தின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும்.
மேலும், மாநில அளவில், தலைமைச்செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். நிதி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், களம் சார்ந்த 3 நிபுணர்கள் இடம் பெற்றிருப்பர். இக்குழுவினர், பொதுமக்களுக்கு விழி்ப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள், நிலையான திட்டம் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
இதை தவிர்த்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தூய்மைக் குழுவும், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வட்டார அளவிலான குழுவும் அமைக்கப்படுகிறது. தூய்மை இயக்கம் மற்றும் இதற்காக உருவாக்கப்படும் தூய்மை தமிழ்நாடு நிறுவனமும் (சிடிசிஎல்) இணைந்து செயல்படும்.
இந்த நிறுவனமானது, திடக்கழிவு சேகரிப்பு, பிரித்தல் பணியை மேம்படுத்துவது, விழிப்புணர்வு, உயிரி கழிவு மேலாண்மை, இவற்றின் மூலம் வருவாய் ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் இந்த நிறுவனம் மாற்றப்பட்டு, அதற்கு ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.