‘‘கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது’’ என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்.19-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை நடந்தன.இதில் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் உடன் இருந்தார்.
பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கெனவே 6 கட்ட அகழாய்வுகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஆனால் 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாது.
அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி ‘அகழ் வைப்பகம்’ ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்தநிலையில் வைப்பது இதுவே முதல்முறை. மேலும் திறந்தவெளியில்பார்வைக்கு வைக்கும்போது, கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலம் மேற்கொள்ளப்படும்.
8-ம்கட்ட அகழாய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மேலும் 7-ம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து அமைச்சர் தனது முகநூல் பக்கத்திலும் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.