Site icon Metro People

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்: நிவாரணத் தொகை ரூ.10 லட்சம் வழங்கினார்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்தாட்ட வீரங்கனை பிரியா நவம்பர் 15-ம் தேதியன்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தவறான சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வியாசர்பாடியில் உள்ள மாணவி பிரியாவின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையும், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையையும், மேலும் அந்த குடும்பத்தினருக்கு வீட்டிற்கான ஆணையையும் முதல்வர் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Exit mobile version