அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் தன்னுடைய காதலனை தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமத்துக்கு வந்து அவரை திருமணம் செய்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள குக் கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இவரும் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் ஃபெரோரோவும் சமூக வலைதளம் மூலம் பழகினர். இவர்களின் நட்பு, காதலாக மாறியது. ஜாக்குலின் ஃபெரோரா ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகளும் உள்ளார். உண்மையாக நேசிக்கும் ஒருவரை சந்திக்க நினைத்தார் ஜாக்குலின். அந்த நேரத்தில் அவருக்கு சந்தன் பழக்கமானார்.
சந்தனின் படிப்பு, கலாச்சாரம், வாழ்வியல் முறை, வயது என அனைத்துமே வேறுபட்டிருந்தாலும், ஜாக்குலினுக்கு சந்தனை மிகவும் பிடித்து போனது. சந்தனைவிட ஜாக்குலின் 9 வயது மூத்தவர். இருவரும் வீடியோ கால் மூலம் பேசினர். இவரின் மனமும் ஒத்து போனது. இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜாக்குலின் முடிவு செய்தார்.
சந்தனும் அவரது குடும்பத்தாரும் ஒப்புக்கொண்ட பின்னர், ஜாக்குலின் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். ஹைதராபாத் விமான நிலையத்தில் அவரை முதன்முதலாக நேரில் பார்த்து மகிழ்ச்சியோடு வரவேற்றார் சந்தன். அதன் பின்னர் சந்தனின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோர், உறவினர்களை ஜாக்குலின் சந்தித்துள்ளார்.
சுமார் ஒரு மாதம் வரை இருவரும் நேரில் பழகி உள்ளனர். சாதி, மதம், பணம், நிறம், வயது என எதையும் பாராமல் காதலுக்கு மதிப்பளித்து பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்து காதலனை சந்தித்து திருமணமும் செய்துள்ளார். தற்போது இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். இவை அனைத்தும் ஒரு வீடியோவாக சமூக வலைதளத்தில் ஜாக்குலின் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக வருகிறது.