இதையொட்டி அந்த நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கல்வி கற்கும் முறை குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், கணினி வரைகலை ஆகியவற்றை பார்வையிட்டு பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள் மகத்தான ஆற்றலை பெற்றுள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர நரம்பியல் சார்ந்த நிபுணர்களுடன் நமது சமூக அமைப்பு, சமமான வாய்ப்பு, கண்ணியம், சமூக சூழல் ஆகியவை தேவைப்படுகின்றன.
நமது நாட்டின் முன்னேற்றத்துக்கும், மனித குலத்தின் முன்னேற்றத்துக்கும் இக்குழந்தைகளின் தனித்துவமான திறமைகள் இன்றியமையாததாக உள்ளன. அவர்களின் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்ய திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உடைய தொழில் முனைவோர் தேவை.
மேலும், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தங்களின் முழுத்திறனையும் உணரக்கூடிய ஒரு சூழலை உருவாக்க சமூகம் கவனம் செலுத்த வேண்டும். அந்த அணுகுமுறையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரக்கம், தகவமைப்பு, ஏற்றுக் கொள்ளும் மனவலிமை, ஆதரவு போன்றவற்றை நாம் கூட்டாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர், வழக்கறிஞர் அபிநயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் நிறுவனத்தின் சிறப்புக் கல்வித்துறை தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.