அமராவதி: டிசிஎஸ் நிறுவனத்துக்கு ஏக்கர் 99 காசு விகிதத்தில் 21 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு , ஆந்திராவில் புதிய தொழில்களை தொடங்க நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆந்திராவில் தனது நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரியது. அந்த நிறுவனத்துக்கு விசாகப்பட்டினத்தில் 21.16 ஏக்கர் நிலத்தை வழங்க ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஏக்கருக்கு 99 காசு அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் ரூ.1,370 கோடியில் புதிய ஐடி அலுவலகத்தை டிசிஎஸ் தொடங்க உள்ளது. இதன் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று, விஜயநகரத்தில் மஹம்மாயா இரும்பு தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு 6.35 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு இலவசமாக ஒதுக்கி உள்ளது. இந்த இடத்தில் ஆலை ஊழியர்களுக்கு 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இதேபோல் ஏலூரு மாவட்டம், துவாரகா திருமலா மண்டலத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் கட்ட 30 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க ஆந்திர அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினத்தில் 87.56 ஏக்கரும், நேலபட்டு கிராமத்தில் 220.81 ஏக்கர் நிலமும் தொழிற்சாலை பூங்காவுக்காக ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் அமராவதியில் சட்டப்பேரவை கட்டிடத்துக்கு ரூ.617 கோடி, ஆந்திர உயர் நீதிமன்றம் கட்ட ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.