‘நொறுக்கல்…’ இந்த வார்த்தைத் தமிழ் இலக்கணத்தில் பிரித்தெழுதுக என்று கேட்கும் கேள்வி வகைமையில் இருக்கிறதே என்று யோசித்தது உண்டா? ஆரோக்கிய உணவு இலக்கணத்தில் இருந்து பிரியாமல் பொருந்தும் வகையிலான சிற்றுண்டி ரகம்தான் இந்த நொறுக்கல்.
சேலத்தில் பிரபலமான ‘தட்டுவடை செட்’ தின்பண்டத்தின் நெருங்கிய உறவு இந்த நொறுக்கல். சேலத்து தட்டுவடை செட் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், தட்டுவடை செட் கடைகளிலேயே அங்கம் வகிக்கும் ‘நொறுக்கல்’ பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் குறைவுதான்.
எப்படித் தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தில் தட்டுவடைகளை அல்லது முறுக்குகளை உடைத்துப் போட்டுக்கொள்கின்றனர். தட்டுவடையா அல்லது முறுக்கா என்பது நம் விருப்பத்தைப் பொறுத்தது. அதில் தேவைக்கு ஏற்ப சீரகத் தூள், மிளகுப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, மசாலா பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்கின்றனர். அதில் துருவிய கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு சீவல்கள்… போன்றவற்றைக் கலந்து, மாங்காய்த் துருவலை மேலே தூவுகின்றனர்.
தக்காளி சட்னி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி ஆகியவற்றைச் சேர்த்து, இஞ்சி விழுதைக் கொஞ்சம் கலந்து… சிறிது தேங்காய் எண்ணெய் / நல்லெண்ணெய் விட்டு, வேர்க்கடலைச் சேர்த்து, அனைத்துப் பொருள்களையும் கரண்டியால் நன்றாகக் கலக்க நொறுக்கல் தயார். சிலரின் விருப்பத்துக்கு ஏற்ப பொரியும் சேர்க்கப்படுகிறது. வேக வைத்த முட்டையை நறுக்கிச் சேர்க்கும் ’முட்டை நொறுக்கல்’ இப்போது பிரபலமாக இருக்கிறது. மிக எளிய முறையில் செய்யப்படும் இந்த நொறுக்கல் சுவையால் மதிமயக்கும்.
வாழையிலையில் கொடுக்கப்படும் நொறுக்கலைச் சாப்பிடும்போது, சட்னிகள் கொடுக்கும் காரமும், காய்களின் மென்மையும், தட்டுவடைகளும் ஒரு கலவையான சுவையைக் கொடுக்கின்றன. நொறுக்கலைத் தயாரிக்கும் போதே காற்றில் பரவும் அதன் வாசனை நம் செரிமான சுரப்புகளை அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. அதாவது பசி உணர்வைச் சட்டென்று அதிகரிக்கிறது. ஒருமுறை சுவைத்துவிட்டால் மீண்டும் மீண்டும் நொறுக்கலை மனம் தேடும். பசியின்மை குறிகுணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நொறுக்கலின் ஆதரவை நாடலாம்.
சிறார்களுக்குத் துரித ரக தின்பண்டங்களுக்கு மாற்றாக இந்த நொறுக்கலை வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கலாம். அதில் சேர்க்கப்படும் கேரட், பீட்ரூட் போன்ற காய் ரகங்கள் உடலுக்குத் தேவைப்படும் நுண்ணூட்டங்களைப் பரிசளிக்கும். புதினா, இஞ்சி ஆகியவற்றின் இருப்பு, செரிமானத்தை உறுதிப்படுத்தும். நொறுக்கல் மலச்சிக்கலை உண்டாக்காது; கூடுதல் கலோரிகளைக் கொடுக்காது. எவ்விதமான செயற்கைச் சுவையூட்டிகளோ பதப்படுத்திகளோ நொறுக்கலில் இல்லை என்பது ஆறுதல்! அப்போதே வாங்கி அப்போதே சாப்பிடப்பட வேண்டிய ஆரோக்கியத் தின்பண்டம் இது.
மாலை வேளைகளில் இந்தக் கடைகளின் முன்பு ஏகப்பட்ட சுவைப் பிரியர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு பிளேட் நொறுக்கலின் விலை 30 ரூபாய்! இரவு உணவுக்குத் தொட்டுக்கொள்ளும் தொடுகை உணவாகப் பயன்படுத்த, நொறுக்கலை பார்சல் வாங்கிச் செல்பவர்கள் அதிகம் என்கிறார் விற்பனையாளர். வாழையிலையில் பார்சலைப் பொதித்துக் கொடுத்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் சாப்பிடுவது சிறந்தது.
சேலத்தைப் பொறுத்த வரை நொறுக்கல், தட்டுவடை செட் சிற்றுண்டியின் வியாபாரம் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.