புதுடெல்லி: ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும், தொழில் செய்ய விரும்புவோர், கடின உடல் உழைப்பை பணியாக கொண்ட நபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களை தொழில் முனைவோராக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த பிரதான் மந்த்ரி முத்ரா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் முத்ரா திட்டத்தின்கீழ், ரூ.10 லட்சம் வரை பிணை இல்லாத கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
முத்ரா திட்டக் கடன் சிஷு, கிஷோர், தருண், தருண் பிளஸ் என 4 வகைகளில் வழங்கப்படுகிறது. இந்த முத்ரா திட்டத்துக்கு பொது மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: இன்றோடு முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு பெறுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தசாப்தத்தில் முத்ரா திட்டமானது, பல கனவுகளை நனவாக்கியுள்ளது. இந்திய மக்களுக்கு எதுவும் சாத்தியமற்றது அல்ல என்பதை இது விளக்குகிறது. ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம். முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் பாதி பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களை சேர்ந்தவர்கள். 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பெண்கள் என்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முத்ரா கடனும் கண்ணியம், சுயமரியாதை மற்றும் வாய்ப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
வரவிருக்கும் காலங்களில், ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் கடன் கிடைக்கும் வகையில் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். இதனால் அவர்களுக்கு நம்பிக்கையும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.