டெல்லியில் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்கவில்லை: பெங்களூரு புகழேந்தி தகவல்

ஓசூர்: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்க வில்லை என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பாக ஒசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா பதிவிட்டிருந்தார். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் ஆகியோரைச் சந்தித்து பேசியதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. செங்கோட்டையனை வைத்து அரசியல் நடைபெறுகிறது. செங்கோட்டையனிடம் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அவ்வாறு சந்தித்து பேச வேண்டி இருந்தால் 4 எம்எல்ஏக்களைக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து சந்தித்திருக்க வேண்டும். இதுவரை டெல்லி சென்றதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரா?

இச்சந்திப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமர்ந்திருப்பது போல உள்ள பழைய புகைப்படங்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் அமித்ஷா 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற பதிவுக்கு பின்னர் அதிமுக தலைவர்கள் குறிப்பாக டெல்லி சென்று வந்த தலைவர்கள் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என பொதுவெளியில் தெரிவிக்காதது ஏன்?

எனவே, செங்கோட்டையனை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் செயல்பாடு களுக்கு அதிமுக இரையாகக் கூடாது. 2026 தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பின்னர் ஏன் தேவையில்லாமல் இப்படிப்பட்ட புரளி கிளப்பி விடப்படுகிறது.