புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 10 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது பெரிய அளவில் தூசு ஏற்பட்டுள்ளது. இது அந்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது. கடந்த வாரம் டெல்லியில் கட்டிடம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்தபாபாத் கட்டிட இடிபாடுகளில் சுமார் 10 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
“இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 14 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவர்கள் அதை உறுதி செய்துள்ளனர். 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதுகிறோம். இடிந்து விழுந்த கட்டிடம் நான்கு மாடி கட்டிடம்” என டெல்லி வடகிழக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் சந்தீப் லம்பா தெரிவித்தார்.
“எங்களுக்கு அதிகாலை 3 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் இங்கு விரைந்து வந்தோம். இந்த நான்கு மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் மக்கள் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என தீயணைப்பு துறை அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று மாலை நகரின் சில பகுதிகளில் மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.