தில்லி தமிழ்ச் சங்கம் 80-வது ஆண்டு விழா!

தில்லி தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா டெல்லியில் விமரிசையாக நடைபெற்றது. டெல்லியில் வாழும் தமிழர்களால் கடந்த 1946-ம் ஆண்டு தில்லி தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகம் வாழும் டெல்லியின் ஆர்.கே.புரத்தில் இச்சங்கம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

தமிழ் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலுடன் தமிழரின் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாதுகாக்கும் பணியையும் டிடிஎஸ் செய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு விழாவுடன் டிடிஎஸ் 80-ம் ஆண்டு விழாவும் நடத்தப்பட்டது.

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் கண்ணன் ஜெகதீசன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தனது உரையில், “பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் மிகவும் பழமையானது. அதிக பாரம்பரியம் கொண்டது. நாட்டின் வளம் மிக்க தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் கொண்டு செல்வதில் பிரதமர் நரேந்திர மோடி பெருமை கொள்கிறார். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டு தமிழரின் பாரம்பரியம் நிலை நாட்டப்பட்டுள்ளது. யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்பதையே ‘வசுதைவ குடும்பகம்’ என பிரதமர் பேசி வருகிறார்” என்றார்.

விழாவில் கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி சாருலதா மணி குழுவினரின் ‘இசைப் பயணம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. டிடிஎஸ் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வரவேற்றார். ஆர்.கே.புரம் சட்டப்பேரவை உறுப்பினர் அனில் குமார் சர்மா, டிடிஎஸ் தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் பெ.ராகவன் நாயுடு, பொருளாளர் எஸ்.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.