விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வளம் கடத்தல் தொடர்பாக நடந்த ஆய்வில், விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் கனிம வளம் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய நடைச்சீட்டு மற்றும் 50 சதவீத பசுமை வரி செலுத்தாமல் கர்நாடகாவுக்குக் கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும், திடீர் ஆய்வு செய்து விதிமீறும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், அனுமதியின்றி இயங்கும் குவாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக ஆய்வு செய்ய வருவாய், காவல், கனிம வளத் துறை அலுவலர்கள் அடங்கிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும், ஓசூர் துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த பிப்.4-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை திடீர் தணிக்கை மேற்கொண்டனர். இதில் விதிமீறிய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 7 இடங்களில் உரிய அனுமதியின்றி கருப்பு கிரானைட் வெட்டி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவை தவிர, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல், சேமிப்பு கிடங்கு அனுமதி பெறாமல் இயங்கிய 2 கிரஷர்களுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டன. அரசு அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், குத்தகை காலம் முடிந்த பின்னர் இயங்கும் குவாரிகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், சேமிப்புக் கிடங்கு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாத கிரஷர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

துணை ஆட்சியர் பிரியங்கா, கோட்டாட்சியர் ஷாஜகான், கனிம வள உதவி இயக்குநர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.