சமூகத்தில் பல விதமான சிக்கல்கள். அவற்றில் ஒன்று சாலை விபத்துகள். விபத்தில் ஒருவர் காயம் அடைந்தால், அவரை மருத்துவமனையில் சேர்க்க தயங்கிய காலம் உண்டு. போலீஸ், வழக்கு, சாட்சியம் என்று அலைக்கழிப்புகள். உதவி செய்பவரை குற்றவாளி போல் பார்க்கும் அணுகுமுறை. இதற்கு தீர்வு காண விபத்துகளில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்பவர்களை போலீஸார் கடுமையாக நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டது.
அதேநேரத்தில், ஒழுங்கற்ற சாலைகள், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, பொழுதுபோக்குக்காக தாறுமாறாக ஓட்டுவது, குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று ஓட்டுவது, செல்போனை பேசிக்கொண்டே ஓட்டுவது… இப்படி ஏராளமான காரணங்கள்.
தவிர அரசு துறைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல், பல காரணங்களுக்காக சாலைகளை அடிக்கடி தோண்டிவிட்டு குண்டும் குழியுமாக போட்டுவிட்டு செல்வதும் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் அப்பாவிகளின் உயிர்கள் பறிபோவது தொடர்கதையாகவே உள்ளது.
இவற்றை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, சாலை விபத்து ஏற்பட்ட பின்னர் உள்ள அந்த ஒரு மணி நேரம் பொன்னான நேரம் (கோல்டன் ஹவர்). அந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதுதொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி அபே எஸ் ஓகா, ‘‘மார்ச் 14 என்று தேதி நிர்ணயித்தும் பணமில்லா சிகிச்சை திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயம். ஏப்ரல் 28-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சக செயலர் இதற்கு பதில் அளிக்க வேண்டும்’’ என்று கடுமையாக உத்தரவிட்டுள்ளார். பணமில்லா சிகிச்சை திட்டத்தை அமல்படுத்த உள்ள தடைகள், அதற்கான தீர்வுகளை அடுத்த விசாரணையின் போதாவது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், போலீஸாருக்காக காத்திருப்பது, மருத்துவ காப்பீடு உள்ளதா என்று கேட்பது, குடும்பத்தார், உறவினர்கள் வரும் வரை காத்திருப்பது, சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டுவார்கள் என்று கேட்பது போன்றவற்றால் அந்த பொன்னான நேரம் வீணாகிறது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.
எனவே, சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தும் மருத்துவமனைகளுக்கு தண்டனை, அபராதம் விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தன்னார்வமாக சேவை செய்யும் மருத்துவமனைகளுக்கு பொருளாதார ரீதியாக நிர்வாக ரீதியாக உதவிகள் செய்வதையும் அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் பொறுப்பு என்பது சாலையில் தொடங்குகிறது. ஒழுங்கான சாலைகள், ஒழுக்கமான வாகன ஓட்டிகள், ஊழலற்ற அரசு நிர்வாகம், மருத்துவமனைகளின் சேவை என்ற நிலை வரும் போது விபத்துகளும் உயிரிழப்புகளும் குறையும்.