Site icon Metro People

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” தொடங்கி 100 ஆவது நாள் வரை!.. ஸ்டாலின் சாதனைகள் என்ன?

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. இதை கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் ஆகியுள்ளார். அவர் மே 7 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என அறிவித்து இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ளன.

அவர் பதவியேற்றதினமே ஆவின் பால் குறைப்பு, இரு தவணைகளாக கொரோனா நிவாரணம் மொத்தமாக ரூ 4000, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தார். இது பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அது போல் பெண் காவலர்களை சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

முதல்வருக்கான தனி செயலாளர்கள்

இதையடுத்து முதல்வருக்கான தனி செயலாளர்கள், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை நியமித்த ஸ்டாலின் தமிழக டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்தார். அவர் அப்பதவிக்கு வந்தவுடன் வாரந்தோறும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு என திட்டத்தை கொண்டு வந்தார். அது போல் கொரோனா காலத்தில் விதிகளை மீறுவோரிடம் போலீஸார் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனா 2ஆவது அலை

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கொரோனாவின் 2ஆவது அலை உச்சத்தில் இருந்தது. தனது அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு இயந்திரத்தை கொண்டு திறமையாக கட்டுப்படுத்தினார் ஸ்டாலின். கொரோனா காலத்தில் ரூ 4000 த்தை இரு தவணைகளாக வழங்கினார். இதை 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றனர். மேலும் ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருட்களையும் இலவசமாக வழங்கினார்.

திருநங்கையர்கள்

அது போல் நகர பேருந்துகளில் திருநங்கையர்களும் மாற்றுத் திறனாளிகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்தார். பின்னர் மாற்றுத் திறனாளியுடன் ஒரு உதவியாளர் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு தனி பிரிவை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரனையும் நியமித்தார். அவரையே முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாகவும் நியமித்தார் ஸ்டாலின்.

முதல்வர் பொது நிவாரணம்

கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய நிலை உள்ளதால் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிவிடுங்கள் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நன்கொடை- செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தார். தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுத்தால் போதும் என்ற கோரிக்கை வைத்தார்.

ஆக்ஸிஜன் இருப்பு

தமிழகத்தில் படுக்கைகள்- மருந்து கையிருப்பு, ஆக்ஸிஜன் இருப்பு உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா வார் ரூம்களை உருவாக்கி அதை திடீரென ஆய்வு செய்தார். மேலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் படுக்கை கிடைக்கவில்லை என திடீரென வார் ரூமிற்கு வந்த போன் காலை எடுத்து பேசி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். மேலும் எல்லோராலும் எளிதில் அணுகப்படும் முதல்வர் என்ற பெயரையும் பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதாகவும் அறிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

குறை கேட்டறிதல்

எங்கு சென்றாலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்டாலின். மேகதாது அணையை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். கொரோனா பாதிப்பால் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு 10,11,12 வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை அறிவித்தார்.

சிறுமி மித்ரா

அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கான மருந்து வரியை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார். மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டதை அறிவித்தார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றார்.

பொருளார ஆலோசனைக் குழு

கொரோனாவால் தமிழகத்தின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் எஸ்தர் டஃப்லோ, ஜான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ் நாராயணன் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு தமிழக அரசின் இந்த முன்னெடுப்பை அனைவரும் பாராட்டியிருந்தனர். அது போல் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்ததை அடுத்து கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் அவரை கொண்டாடினார்கள்.

ஸ்டாலின் தனி கொள்கை

இதையடுத்து நேற்றைய தினம் தமிழகத்தில் முதல் முறையாக இ பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஸ்டாலின் தலைமையிலான அரசு. அப்போது கல்விக்கான தனி கொள்கை, அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி வழங்குதல், பெட்ரோல் விலை குறைப்பு, ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தார்.

வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்

நீட் தேர்வு, வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம், ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு திமுக அரசு துணை போகாது என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்து தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது.

Exit mobile version