ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தொடங்கி வைத்துள்ளார். மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம், டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து பஞ்சாப் மாநில அரசும், தமிழக அரசும் 2021-ம் ஆண்டு முதல் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 7-வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரும் இணைந்திருப்பது இத்திட்டத்துக்கு நாடு முழுவதும் கிடைக்கும் வரவேற்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவது, வேலைக்குச் சென்று வருதல், மளிகை சாமான்கள் வாங்குதல், கோயில்களுக்கு செல்லுதல், உறவினர்களைப் பார்த்து வருதல், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று வருதல் போன்றவற்றுக்கு இலவச பயணத்தை மகளிர் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மகளிர் சுதந்திரமாக நடமாடுவதன் மூலம் பொது இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.500 வரை போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்றும் மகளிர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு பயணம் இலவசம் என்றாலும் தமிழகத்தில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.16 என்ற அளவில் போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு வழங்குகிறது. டெல்லியில் ரூ.10 வழங்கப்படுகிறது. பஞ்சாப் ஆண்டுக்கு ரூ.450 கோடியும், கர்நாடகா ரூ.6,000 கோடியும் செலவழிக்கின்றன. இந்தப் பணம் விரயமல்ல; மகளிர் முன்னேற்றத்துக்கான செலவு என்றே கணக்கில் கொள்ள வேண்டும்.
இலவச பயணத்துக்கு பெண்களிடையே நாடு முழுவதும் வரவேற்பு இருந்தாலும், அவர்களை அவமானப்படுத்தும் போக்கும் ஆங்காங்கே நடந்து வருகிறது. பெண் பயணிகளிடம் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் ஆண் பயணிகள் தரக்குறைவாக நடந்து கொள்ளுதல், நாகரிகமற்ற முறையில் ‘கமென்ட்’ அடித்தல் போன்ற செயல்களையும் செய்து வருகின்றனர். மகளிர் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவதை ஆண் பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். மகளிருக்கு இலவச பயண அனுமதி கொடுத்ததால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாகிவிட்டது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
அது ஒரு வகையில் உண்மை என்றாலும், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததே நியாயமான காரணமாகும். மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சக கணக்கின்படி, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 60 பேருந்துகள் இயங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் அந்த எண்ணிக்கையில் பேருந்து வசதிகள் இல்லை. போதுமான பேருந்து வசதிகள் வழங்காமல் மகளிரை குற்றம் சொல்வதில் நியாயமில்லை. நகரங்களில் மாற்றுப் போக்குவரத்தாக வளர்ந்துவரும் மெட்ரோ ரயில்களிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.