Site icon Metro People

இன்று முதல் பிளஸ் 2 துணைத்தேர்வு: 45 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதுகின்றனர்

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2துணைத்தேர்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர்.

மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19-ம் தேதி வெளியிடப்பட்டன. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு இன்று (ஆக.6) தொடங்கி 19-ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்டமொழிப்பாடத் தேர்வுகள் நடை பெறும்.

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 45,654 தனித் தேர்வர்கள் எழுதவுள்ளனர். அதனுடன் பிளஸ் 2 தேர்வு முடிவில் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத 25 பள்ளி மாணவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

தேர்வு மையங்களில் தனிநபர்இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறி உள்ள தேர்வர்களை தனி அறையில் அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்கலாம் என்று துறை அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version