குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீச னில் 4 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சாய் கிஷோர் கூறும்போது, “ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான் உட்பட 4 தமிழக வீரர்கள் விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் தமிழக அணி அதிக கோப்பைகளை வெல்லும் பட்சத்தில் இன்னும் ஏராளமான தமிழக வீரர்கள் பல்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
இடது கை சுழற்பந்து வீச்சாளராக கேரம்பால் வகையிலான பந்துகளை வீசுவதற்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. எனினும் 3 முதல் 4 வருடங்களாக இந்த பந்துகளை வீசுவதற்காக பயிற்சி செய்துள்ளேன்.
இந்த சீசனில் கேரம்பால் பந்துகளை சிறப்பாக பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் பந்து வீசும் போது எந்த பேட்ஸ்மேன் விளையாடுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளமாட்டேன். எந்த இடத்தில் பந்துகளை வீச வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துவேன்” என்றார்.