சென்னை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி ஆட்டமிழந்த போது ரியாக் ஷன் செய்த ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 800-ல் இருந்து 4 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஐபிஎல் எப்போதும் பல திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது மற்றும் பல வீரர்களை ஏழ்மை நிலையில் இருந்து பணக்காரர்களாக உயர்த்தியுள்ளது. ஆனால் இம்முறை ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவரை சமூகவலைதளத்தில் வைரலாக்கி உள்ளது.
கடந்த 6-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை காண குவாஹாட்டியை சேர்ந்த சிஎஸ்கே ரசிகையான 19 வயதான ஆர்யப்பிரியா புயான் என்பவர் சென்றிருந்தார். அப்போது அவர், தனது வாழ்க்கை ஒரு நொடியில் மாறப்போகிறது என்பதை உணரவில்லை.
முதன்முறையாக தனக்கு மிகவும் பிடித்த தோனியின் ஆட்டத்தை மிகுந்த ஆராவாரத்துடன் ஆர்யப்பிரியா கண்டுகளித்து வந்தார். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் சந்தீப் சர்மா தாழ்வாக வீசிய ஃபுல்டாஸ் பந்தை தோனி, கவ்கார்னர் பகுதியை நோக்கி சிக்ஸருக்கு விளாசினார்.
ஆனால் ஷிம்ரன் ஹெட்மயர் டைவ் அடித்து அபாரமாக கேட்ச் செய்தார். இதனால் தோனி ஆட்டமிழக்க மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மவுனத்தில் திகைத்துப் போன ரசிகர்களில் ஆர்யப்பிரியாவும் ஒருவர்.
அப்போது ஆர்யப்பிரியா ஒரு ரியாக் ஷன் கொடுத்தார். ஹெட்மயரை நோக்கி கையை சுட்டிக்காட்டி கோபத்துடன் தனது முஷ்டியை இறுக்கி எதிர்வினையாற்றினார் ஆர்யப்பிரியா. அவரது உணர்ச்சிகரமான செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இது அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி உள்ளது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக ஆர்யப்பிரியாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெறும் 800 என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அவரை சுமார் 4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஒரே ஒரு ரியாக் ஷனில் ஆர்யப்பிரியா சமூக வலைதளத்தில் பிரபலமாகிவிட்டார்.