கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த கடந்த 2-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. மேலும், இரவும் சுவாமி, அம்மன்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சண்முகர் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சத்தில் (ருத்திரர்) வீதியுலா வந்து அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இன்று அதிகாலை 7 மணிக்கு பச்சை மலர்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இந்நிகழ்ச்சி திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக தை மற்றும் பங்குனி மாதத்தில் கழுகுமலை கோயிலில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கோயில் நடை இரவு முழுவதும் அடைக்கப்படவில்லை.
விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர தேரோட்டம் நாளை காலை 10 மணிக்கு மேல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.