நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இந்தியாவில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் முறையான டிரைவிங் பயிற்சி வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கிறது. நாடு முழுவதும் படிப்படியாக 1,600 டிரைவிங் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தும் ரூ.4,500 கோடி செலவிலான திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இவை தொடங்கப்படும்.
டிரைவிங் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், டிரைவிங் பயிற்சி மையங்கள், பிராந்திய டிரைவிங் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த பொருத்தமான பரிந்துரைகளை அனுப்புமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளில் பல, பயிற்சியற்ற டிரைவர்களால் ஏற்படுகிறது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.