சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு பதிலாக அணியை இந்த சீசனில் தோனி வழிநடத்த உள்ளார். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் சொல்லியுள்ளது என்ன என்பதை பார்ப்போம்.
ருதுராஜ் விலகலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதி செய்துள்ளார். இன்று சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.
“முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உங்களது எல்லோரது ஆதரவுக்கும் அன்புக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது. இப்போது எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் (தோனி) கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். நிச்சயம் எங்களுக்கு இது மாற்றம் தரும் என்று நம்பிக்கை உள்ளது. நான் அணி உடனே இருப்பேன். டக்-அவுட்டில் இருந்து அணியை சப்போர்ட் செய்வேன்.
இந்த தருணத்தில் எங்கள் அணிக்கு உதவ வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நிச்சயம் இந்த சீசனை சிறந்த முறையில் நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என ருதுராஜ் கூறியுள்ளார்.
28 வயதான ருதுராஜ் கெய்க்வாட், நடப்பு ஐபிஎல் தொடரில் 5 ஆட்டங்களில் முறையே 53, 0, 63, 5, 1 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 63 ரன்கள் அவர், காயம் அடைந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ருதுராஜ் காயம் அடைந்திருந்தார். அதன் பின்னர் அவர், விளையாடிய அடுத்த இரு ஆட்டங்களிலும் குறைந்த ரன்களில் நடையை கட்டியிருந்தார். முழங்கை காயத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் பொறுப்பேற்றார். 2020 முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார். 70 இன்னிங்ஸில் 2502 ரன்கள் எடுத்துள்ளார்.