Site icon Metro People

குஜராத்தில் அமலாகிறது பொது சிவில் சட்டம்: குழு அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

ஒருவர் பின்பற்றும் மதம், அவரது பாலினம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கையை பாஜக கொண்டிருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பாஜக வெற்றி பெற்றால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அது வாக்குறுதி அளித்தது. எனினும், இவ்விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொது சிவில் சட்டம் அரசியல் அமைப்புக்கும் சிறபான்மையினருக்கும் எதிரானது என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, பொது சிவில் சட்டம் கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறியது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைக்கு உட்பட்டது என்றும், அவர்கள் அதற்கான சட்டத்தை கொண்டு வரலாம் அல்லது கொண்டு வராமல் போகலாம் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தனது பதில்மனுவில் தெரிவித்திருந்தது.

எனினும், தங்கள் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச பாஜக அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இதைப் பின்பற்றி, குஜராத்திலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

காந்திநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இதனை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் புபேந்திர படேல் ஆகியோரின் வழிகாட்டலின்படி, குஜராத் அமைச்சரவையில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால், அம்மாநில வாக்காளர்களைக் கவரும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version