பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தின்படி, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2000 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா, பிஹார் போன்ற மாநிலங்களில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கு ஒன்றில் குற்றவாளிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குழந்தை கடத்தல் வழக்கில் ஜாமீன் மனுக்கள் இரக்கமின்றி பரிசீலிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் பலர் மாயமாகிவிட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது, காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திடும்படியாவது நிபந்தனை விதித்திருக்க வேண்டும்.

அவ்வாறு நிபந்தனை விதிக்கப்டாததால் குற்றவாளிகள் தப்பியுள்ளனர். இந்த வழக்கை உ.பி.அரசு கையாண்ட விதம் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் மேல் முறையீடு செய்யப்படவில்லை.

ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய குற்றவாளிகள் ரூ.4 லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை பெற்றுள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்றால் கடத்தப்பட்ட குழந்தையை வாங்க கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்ற காவலில் அனுப்ப வேண்டும். அவர்கள் மீது ஒரு வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். தலை மறைவு குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாது கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்.

நாடு முழுவதும் குழந்தை கடத்தல் வழக்குகளின் நிலவரங்கள் குறித்த அறிக்கை பெற உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும். இதில் அலட்சியம் காட்டப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். குழந்தை இறக்கும் வேதனையை விட, குழந்தை கடத்தப்பட்ட வேதனை மிகவும் கொடியது. மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை காணாமல் போல், அந்த மருத்துவமனையின் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.