பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் பாங்காக் சென்றடைந்தார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்.
2 நாடுகளுக்கு பயணம்: தாய்லாந்துக்கு புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிம்ஸ்டெக் நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் ஷினவத்ராவை நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியா-தாய்லாந்து இடையே வேறெங்கும் இல்லாத கலாச்சார பிணைப்பு உள்ளது. தாய்லாந்தின் ராமாயணமான ராமாகியன் நிகழ்ச்சி எனது மனதை பெரிதும் கவர்ந்துவிட்டது. இது, இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே பகிரப்பட்ட கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளை வெளிப்படுத்தும் உண்மையான மற்றும் செழுமையான அனுபவமாக இருந்தது. நமது ராமாயணம் உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும், பாரம்பரியங்களையும் நம்முடன் இணைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில், வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், நேபாள பிரதமர் சர்மா ஒலி, மியான்மர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹை்லைங் உள்ளிட்டோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.