ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு விதை நெல் தரும் பாசிக் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் விரைவில் திறப்பதாக வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
புதுச்சேரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றை மானிய முறையில் வழங்குவதற்காக பாசிக் அலுவலகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாசிக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி மூடிவிட்டனர். இதனால் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய ஊடு பொருட்களை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு வாங்கி வந்தனர். இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்ததால் சில விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தங்கள் விளைநிலங்களை விற்பனை செய்துவிட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதல்வர் ரங்கசாமி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு விதை நெல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த ஊடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி முதற்கட்டமாக மங்கலம் தொகுதி அரியூர் பகுதியில் உள்ள பாசிக் அலுவலகத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தொகுதி எம்எல்ஏவும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் கலந்துகொண்டு பாசிக் அலுவலகத்தைத் திறந்து வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கினார்.
இதன் விலை தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்த விதை நெல் வெளிச் சந்தையில் ரூ.45க்கும் பாசிக் அலுவலகத்தில் ரூ.38க்கும் விற்பனை செய்வதாக விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் கிலோவுக்கு அரசு மானியம் ரூ.10 அரசுத் தரப்பில் தருவதால், மானிய விலையில் தற்போது ரூ.28க்கு விதை நெல் வழங்கப்படுகிறது” என்றனர்.
வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறுகையில், “விவசாயிகளுக்கு இந்த அரசு தனிக் கவனம் செலுத்தும். நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்த எல்லாவித நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். இதேபோன்று அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள பாசிக் அலுவலகம் திறக்கப்படும். வேளாண்துறையில் குறைகள் இருந்தால் நேரடியாக என்னிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம். குறைகள் கண்டிப்பாகத் தீர்த்து வைக்கப்படும். அரசு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி தனி மனித வருவாயைப் பெருக்கி அரசுக்கு உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.