இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின.
பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்கு நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து விலக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் ஒற்றுமையாக நிற்கிறது.
நமது மரியாதை, நமது பாதுகாப்பு, நமது ராணுவம், நமது தேசம் என நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம். பாகிஸ்தானின் 24 கோடி மக்களும் விளைவுகளைப் பற்றி பயப்படவில்லை. அவர்கள் தைரியமானவர்கள், அவர்கள் ராணுவத்துடன் நிற்கிறார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு துணிச்சலுடன் அவர்களை எதிர்த்துப் போராடுவார்கள்.
சர்வதேச சட்டத்தின்படி, ஜம்மு – காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும், மேலும், பொது வாக்கெடுப்பு நடைபெறும் வரை அது அப்படியே நீடிக்கும். இந்தியா எத்தனை ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுத்தாலும், யதார்த்தத்தை மாற்ற முடியாது” என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.