Site icon Metro People

கோகுல்ராஜ் வழக்கு: கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை முறையாக போலீஸ் ஆய்வு செய்யவில்லை என வாதம்

சென்னை: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்கப்பட்டன.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் எட்டு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் இரண்டு சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மேலும், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வீடியோ மற்றும் அந்த வீடியோ பதிவான மெமரி கார்டு தொடர்பாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version