திரைப்பட இயக்குநர், சமூகக் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் என இருவேறு தளங்களில் இயங்கி வருபவர் பா.இரஞ்சித். அவர் நிறுவிய நீலம் பண்பாட்டு மையம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடி வருகின்றது.
‘கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள், கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை’ என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய விழாவாக கடந்த 5 ஆண்டுகளாக ‘வானம்’ கலைத் திருவிழாவை நீலம் பண்பாட்டு மையம் வழியாக முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பா.இரஞ்சித்.
நடப்பாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதியான நேற்று வானம் கலைத் திருவிழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் தொடங்யது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று தொடங்கி 6 ஆம் தேதிவரை பி.கே.ரோசி திரைப்படவிழா நடைபெறுகிறது. இதில், தடை செய்யப்பட்ட ஒரு சில உலகத் திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்படவிருக்கின்றன. எதற்காக பி.கே.ரோசியின் பெயர் பட விழாவுக்குச் சூட்டப்பட்டது? முதல் மலையாள மொழிச் சலனத் திரைப்படமாக ஜே. சி. டேனியல் நாடார் எழுதி, இயக்கி, தயாரித்து 1930இல் வெளியிட்ட ‘விகத குமாரன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் நாடகக் கலைஞர்தான் தான் பி.கே.ரோஸி. இதற்காக ஆதிக்க சாதியினரின் கடும் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் சந்தித்தார் ஜே.சி.டேனியல். அவரது படத்தின் முதல் காட்சியில் அவரையும் பி.கே.ரோஸியையும் விரட்டியடித்தனர். இந்த சினிமாவுக்காக தனது செல்வத்தையெல்லாம் இழந்தார். அது மட்டுமல்ல; அது மட்டுமல்ல; மலையாளத்தின் முதல் கதாநாயகியாக இன்று வரலாறு நினைவில் வைத்திருக்கும் பி.கே.ரோஸியை ‘விகத குமாரன்’ படத்தில் ‘சரோஜினி’என்கிற நாயர் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இத்தகைய வரலாறு கொண்ட பி.கே.ரோஸியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்கையையும் வாழ்வியலையும் பேசும் உலகப் படங்களைத் திரையிடும் உலகப் படவிழாவை நடத்தில் வருகிறது நீலம் பண்பாட்டு மையம்.