புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் என அரசு அறிவித்துள்ளது.
புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தும் வகையில் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாடகள் புதுவை பிரதேச கிழக்கு கடல் நெடுகிலும், கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்துார் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும், அதேபோல் ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்திலும் மீன்பிடிப்பு பகுதியிலும் இந்த தடை விதிக்கப்படுகிறது.
பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது. பைபர் படகிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கேரளம் அருகேயுள்ள மாஹே பிராந்தியப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. புதுவையில் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.