Site icon Metro People

கரோனா காலத்திலும் தொடர்ந்து உயரும் ஜிஎஸ்டி வசூல்: ஆகஸ்டில் ரூ.1,12,020 கோடியை கடந்தது

கரோனா காலத்திலும் இந்தியாவில் ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்டிலும் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கரோனா 2-ம் அலைக்கு பிறகு பொருளாதாரம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த ஜூன் மாதம் ஜிஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. பின்னர் கடந்த ஜூலையில் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து ஜிஎஸடி வசூல் மீண்டும் ஒரு லட்சம் கோடியை கடந்தது.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது மாதமாக ஆகஸ்ட மாதத்திலும் ஜிஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட) மற்றும் மேல்வரி(செஸ்) ரூ.8,646 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.646 கோடி உட்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,043 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.19,139 கோடியும் மத்திய அரசு வழக்கம்போல் வழங்கிவிட்டது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தற்காலிக தீர்வாக மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இடையே 50: 50 என்ற விகிதத்தில் ரூ.24,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வழக்கமான மற்றும் தற்காலிக தீர்வுகளுக்குப்பின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஆகஸ்ட் மாத மொத்த வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.55,565 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.57,744 கோடி.

2021 ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய்(இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 27 சதவீதம் அதிகம். 2019-20ம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98, 202 கோடியுடன் ஒப்பிட்டாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம்.

தொடர்ந்து 9 மாதங்களாக, ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்து வந்த ஜிஎஸ்டி வசூல், கரோனா 2-ம் அலைக்குப்பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்தது.

இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Exit mobile version