நாகப்பட்டினம்: வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மானியத்தொகையை விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). அப்பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நாகையில் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அண்மையில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அந்தக் கடனுக்கு அரசின் மானியமாக வர வேண்டிய ரூ.1.25 லட்சத்தை விடுவிக்க, தனக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் தருமாறு சதீஷ்குமாரிடம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் (வணிகத் துறை) அன்பழகன் நிர்பந்தம் செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் உதவி இயக்குநர் அன்பழகனிடம், நேற்று சதீஷ்குமார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், உதவி இயக்குநர் அன்பழகனைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பழகன், சிறையில் அடைக்கப்பட்டார்.