Site icon Metro People

நல்லது தானே சொல்லியிருக்காரு” – விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கிவருகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது

இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்வில் பேசிய விஜய், ஒரு தொகுதியில் ரூ.15 கோடி செலவு செய்தால் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். காசு வாங்காமல் ஓட்டுபோட வேண்டும் என பெற்றோரிடம் தெரிவியுங்கள். நீங்கள் தான் ஒரு சில ஆண்டுகளில் முதல் தலைமுறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்.

பெற்றோர் கண்காணிப்பிலிருந்து வெளியே போகும்போது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துங்கள். தனிப்பட்ட அடையாளத்தை எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஏதும் பிரச்னையா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version