ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, தொடர்ந்து 5 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கடலுக்குச் சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருநத படகுகள் குந்துக்கால் மற்றும் தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகப் பகுதிகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
மேலும், கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனும் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். பாம்பன் மற்றும் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்கின்றனர்.