‘ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுக’ – ராமதாஸ்

சென்னை: “பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட் ரூ.2650 என்ற விலையை அடிப்படை விலையாக வைத்து ஆற்றுமணலை ஆன்லைன் முறையில் ஏலத்தில் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்று மணல் தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டால் அரசுக்கு வருமானம் கிடைக்காது என்பது மட்டுமின்றி, பொதுமக்களும் மிக அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நடைமுறை அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காது.

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் பகுதிகளில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து 2013-ம் ஆண்டில் அங்கு செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டன. அங்கிருந்து எடுக்கப்பட்டு யார்டுகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஒரு பகுதி அப்போதே ஏல முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மணலை இப்போது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது நல்ல முடிவ

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட மணலை அரசே நேரடியாக விற்பனை செய்யாமல் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, மணலுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் அவருக்கே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முறையில் ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால், தனியார் ஒப்பந்ததாரர் ஒரு யூனிட் மணலை ரூ.7500 வரை விலை வைத்து விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது நியாயமல்ல.

அரசின் சொத்துகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விற்பனை செய்யப்படவேண்டும். பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் உள்ள மணலை அரசு தான் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். மாறாக, தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் போது அரசுக்கு வருமானம் கிடைக்காது. அதே நேரத்தில் தனியார் அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பொதுமக்களுக்கு இன்னும் அதிகமான விலையில் தான் மணல் கிடைக்கும். அதனால், கட்டுமானச் செலவுகள் அதிகரிக்கும்.

கடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பறிமுதல் செய்த மாவட்ட நிர்வாகம் 27.11.2013 அன்று பொது ஏலம் மூலம் அந்த மணலை விற்பனை செய்தது. அப்போது ஒரு யூனிட் மணல் ரூ.6100 என்ற தொகைக்கு ஏலம் போனது. இப்போதும் ஆன்லைன் முறையில் பொது ஏலம் மூலம் மணலை விற்பனை செய்யலாம். தேவையான பொதுமக்கள் ஆன்லைன் முறையில் மணலை ஏலத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

அவ்வாறு செய்யும் போது, சந்தையின் தேவைக்கு ஏற்ப மணலுக்கு அதிக விலை கிடைக்கலாம்; அதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் பொதுமக்கள் ஏலத்தில் எடுக்கும் தொகை சந்தை விலையை விட குறைவாகத் தான் இருக்கும் என்பதால் மக்களுக்கும் பயன் கிடைக்கும். இதன்மூலம் அரசு, பொதுமக்கள் என இரு தரப்பினரும் பயனடைவார்கள்.

எனவே, பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட் ரூ.2650 என்ற விலையை அடிப்படை விலையாக வைத்து ஆற்றுமணலை ஆன்லைன் முறையில் ஏலத்தில் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ஏல விவரங்களை உடனுக்குடன் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.