Site icon Metro People

நெடுஞ்சாலைத் துறை அடிப்படை படிப்பு குறித்த அரசாணை 2017-க்கு பிறகே செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அடிப்படை படிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2017-ம் ஆண்டுக்குப் பிறகே செல்லுபடியாகும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் 10-ம் வகுப்புக்கு இணையான ப்ரீபவுன்டேசன் (அடிப்படை படிப்பு) படிப்பு முடித்தவர்கள் இரண்டாம் நிலை திறன்மிகு உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் பதவி உயர்வும் பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கு இணையான ப்ரீபவுன்டேசன் படிப்பை பதவி உயர்வு, பணி நியமனத்துக்கு தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என தமிழக அரசு 2017-ல் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை அடிப்படையில் பலர் பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.

இந்தப் பதவி இறக்கத்தை ரத்து செய்து, முந்தையப் பணியில் தொடர அனுமதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மர் உள்பட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, ப்ரீபவுன்டேசன் படிப்பு பதவி உயர்வு, பணி நியமனத்துக்கு தகுதியல்ல என அறிக்கை அளித்துள்ளது. அதன்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசாணைக்கு எதிரான வழக்கில் அரசாணைக்கான காலம் 20.11.2017 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் அனைவரும் ப்ரீபவுன்டேசன் படிப்பை 2013-க்குள் முடித்துள்ளனர். இதனால், அந்த அரசாணையை 2017 முதல் தான் அமல்படுத்த வேண்டும். எனவே, மனுதாரர்கள் அனைவரும் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறத் தகுதியானவர்கள் என்பதால், மனுதாரர்கள் தேர்ச்சி பெற்ற நாளை கணக்கிட்டு அவர்களுக்குரிய பதவி உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்” என்று உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Exit mobile version