ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 14-வது சீசனின் 2-வது பாதியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்து சேர்ந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் லீக் டி20 தொடரில் டூப்பிளசிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகிய மூவரும் இடம் பெற்று விளையாடினர். இதனால், துபாய் வந்து 2 நாட்கள் மட்டும் தனிமையில் இருந்து கரோனா பரிசோதனைக்குப்பின் சிஎஸ்கே பயோ-பபுளுக்குள் இணைவார்கள்.
இதுகுறித்து சிஎஸ்கே அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 3 வீரர்கள் சிஎஸ்கே எக்ஸ்பிரஸில் இணைந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் கெய்ரன் பொலார்ட் ஐபிஎல் டி20 தொடருக்காக அபு தாபி வந்து சேர்ந்துள்ளார். சமீபத்தில் முடிந்த கரீபியன் ப்ரீமியர் டி20 லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக பொலார்ட் இருந்தார்.
கரீபியன் லீக் தொடரில் பயோ-பபுள் சூழலி்ல் இருந்ததால், அபு தாபியில் 2 நாட்கள் தனிமை மற்றும் பரிசோதனைக்குப்பின் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் பயோ பபுளில் இணைவார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மிகப்பெரிய மனிதர் வந்துவிட்டார். எங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு குடைக்குள் வந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ம் ேததி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.