தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே தேர்தலுக்காக எந்தெந்தக் கூட்டணிகள் அமையும் என்கிற சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் தேர்தல் வியூகராக அறியப்படுபவருமான அமித் ஷாவைச் சந்தித்த பிறகு அதிமுக – பாஜக கூட்டணி பற்றிய பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. கூடவே, இக்கூட்டணி தொடர்பாக எதிர்மறையான ஊகங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சந்திப்புகள்: ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவரைத் திடீரெனச் சந்திப்பார்கள். பிறகு, “தொகுதி மேம்பாட்டுக்காக முதல்வரைச் சந்தித்தோம்” என்று விளக்கம் அளிப்பார்கள்; ஒருகட்டத்தில், எதிர்க்கட்சி வரிசையிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, அறிவிக்கப்படாத அதிமுக ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள். அதுபோல, தற்போது டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர், “தமிழக நலன் சார்ந்து அமித் ஷாவைச் சந்தித்தோம்” என்று கூறுகிறார்.