Site icon Metro People

மாநாடு வெளியாகி 100 நாள்: எல்லா புகழும் சிம்புவிற்கே: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்  உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’.  இந்தப் படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மாநாடு வெளியாகி 100 நாள் ஆனதை தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் “துணிந்து இறங்கு” எனத் தட்டிக் கொடுப்பவர். துணிந்து இறங்கிச் செய்த படம் “மாநாடு” . இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. சமீபகாலமாக 100-வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தைத் துரத்திவிடும் இந்நாட்களில் “மாநாடு” தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.

வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு. இப்படம் 100 நாட்களைத் தொடக் காரணமான இயக்குநர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் டி.ஆர், எஸ். ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ் ஏ சி, வாகை சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உட்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிம்பு இல்லை என்றால் இந்த படமே இல்லை. இந்த வெற்றியும், புகழும் அவருக்கே சொந்தம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கே எல் பிரவீண், சண்டைப்பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version