2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: * ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர தமிழக அரசு உதவி செய்யும்.
* முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* மருத்துவத்துறைக்கு ரூ.17,091 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* வட சென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும்.
* 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும்.
* புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும்.
* வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.
* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்படும்
* சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும்
* பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் தொகுக்கப்படும்.
* வள்ளலாரின் 200வது ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும்.
* பழமையான தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.
* இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.1062 கோடி ஒதுக்கப்படும்.
* தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
* வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%-ல் இருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.
* உக்ரைன் போரால் வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்.
* தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு அளிக்கப்பட்ட மானியம், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றின் தாக்கம் இந்த பட்ஜெட்டில் காணப்படும்.
* புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* முதல்வரின் முகவரின் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
* சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
* கூட்டாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர் முயற்சி நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆனால், மாநில உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும்.
அவையில் அதிமுக அமளி: தமிழக சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு கோரி அமளியில் ஈடுபட்டார். அதிமுகவினரின் கூச்சல், குழப்பத்திற்கும் இடையே நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
சபாநாயகர் கண்டனம்: அவையில் அமளி செய்த அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வன்மையாகக் கண்டித்தார். எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவராக இருந்தவர்கள் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு பட்ஜெட் நாளன்று வேறு அலுவலுக்கு இடமில்லை என்று தெரியாதா? சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று அமைதி காத்திருக்கலாம் இல்லாவிட்டால் அவையிலிருந்து வெளியேறியிருக்கலாம். அமளியில் ஈடுபடுவதா நியாமா? என்ற கேள்வியை முன்வைக்கிறேன் என்றார்.
முதல் முழுமையான பட்ஜெட்: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆக.13-ம் தேதி தாக்கல் செய்தார். ‘காகிதம் இல்லா சட்டப்பேரவை’ என்ற திட்டத்தின்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதவடிவில் இல்லாமல் மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) தாக்கல்செய்தார். முதல்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை ஆக.14-ம் தேதி துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.