மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதைஎதிர்த்து தனியார் பள்ளி மாணவர்களும், இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி அரசு உதவி பெறும் மாணவர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, ‘‘தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளபோது எஞ்சிய 31 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டால், பொதுப் பிரிவில் உள்ள தகுதியான மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று மனுதாரர்கள்தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே’’ என தலைமை நீதிபதிகேள்வி எழுப்பினார். ‘‘இதுபோன்ற இடஒதுக்கீடுகளால் ஏற்கெனவே பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்தான் மீண்டும் மீண்டும் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள், பின் தங்கியவர்களாகவே உள்ளனர். இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என கருத்து தெரிவித்தார்.
தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் கபில் சிபல், பி.வில்சன் ஆகியோர், “பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில்தான் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் தகுதியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. சமூக பொருளாதாரம், கட்டமைப்பு சமமற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் நன்றாக ஆராய்ந்து நீதிபதிகுழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்கள் பிரத்யேகமாக மையங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால்அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதால்தான் இந்த சட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில்தான் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் போன்றவை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலில்உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்திடம் அறிவுறுத்தினார். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால் நீட் பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டு இருக்காது” என்றார். பின்னர், வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்குகளின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.