அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு தொடர்பாக அதிமுக மீதும், என் மீதும் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம்வகித்தபோது, இந்திய மருத்துவக் குழுவால் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ஒழுங்கு நெறிமுறை 2010 டிசம்பர் 27-ம் தேதி வகுக்கப்பட்டு, அரசிதழில் அதே மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதாவது, 2010-ம் ஆண்டே மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அப்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக இருந்தவர், திமுகவைச் சேர்ந்த எஸ்.காந்திசெல்வன். அடுத்த 5 மாதங்களில் திமுக ஆட்சியை இழந்து விட்டதால், அப்போது நீட் தேர்வு அமல்படுத்தப்படவில்லை.
எனவே, கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டதாக துரைமுருகன் கூறுவது உண்மையல்ல.
பின்னர், நீட் தேர்வு மூலம்தான் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுக்கும் எம்சிஐ அறிவுறுத்தியது. இதை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் எதிர்த்தனர்.
இதையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வைத் தள்ளிவைத்தது. 2013-ல் நீட் தேர்வு அறிவிப்பு வெளியானபோது, அதை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், நீட்அறிவிப்புக்கான 2 அறிக்கையையும் ரத்து செய்யப்பட்டது. இதில் திமுகவின் பங்கு இல்லை.
நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. திமுகவின் தவறால் ஏற்பட்டகாயத்துக்கு மருந்து கொடுத்துகுணப்படுத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
நீட் தேர்வு ரத்துக்கு அதிமுகதொடர்ந்து குரல் கொடுக்கும். ஏற்கெனவே செய்த தவறை ஒப்புக்கொண்டு பரிகாரம் செய்யத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளா மல், அதிமுகவைக் குறை கூறுவது கண்டனத்துக்குரியது.