வேலூர் மார்க்கெட்டில் பொங்கலுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கதிரவனுக்கு படைக்கப்படும் செங்கரும்பு வேலூர் மாவட்டத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்பட தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் திருநாளுக்காக வேலூர் மார்க்கெட்டுக்கு ஒரு லாரியில் 300 கட்டுகள் என, 10 சரக்கு லாரிகளில் 3 ஆயிரம் செங்கரும்பு கட்டுகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டன.
அதேநேரத்தில் சிதம்பரம், சேலம், விழுப்புரம், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து விவசாயிகளே செங்கரும்புகளை லாரிகளில் கொண்டு வந்து நேரடியாக வேலூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக வேலூர் மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்த செங்கரும்புகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.எனவே, தேக்கமடைந்த செங்கரும்புகளை தமிழக அரசு வாங்கி தற்போது ரேஷன் கடைகளில் விடுபட்டவர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.