Site icon Metro People

உள்ளாட்சித் தேர்தல்; முதல்கட்ட விறுவிறு வாக்குப்பதிவு: வேலூர் மாவட்டம் 6.84% – ராணிப்பேட்டை மாவட்டம் 14%

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் 6.84%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக். 06) காலை 7 மணிக்குத் தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவர், 2,079 ஊராட்சி வார்டு கவுன்சிலர், 138 ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர் என, மொத்தமுள்ள 2,478 பதவிகளுக்கு இரண்டு கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை தொடங்கியுள்ளது. தேர்தலில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 103 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக 862 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 719 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில், காட்பாடி ஒன்றியத்தில் மட்டும் 2 ஒன்றியக் குழு கவுன்சிலர், 16 கிராம ஊராட்சித் தலைவர்கள், 298 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் என, 316 பதவிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 31,717 வாக்குகள் பதிாவகியுள்ளன. இது 6.84 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் முதல்கட்டத் தேர்தலில் ஆற்காடு, திமிரி மற்றும் வாலாஜா ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 56 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 123 கிராம ஊராட்சித் தலைவர், 816 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி என, மொத்தம் 1,001 பதவிகளுக்கு 2,707 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 653 வாக்குச்சாவடிகளில் 196 பதற்றமானவை என்று கண்டறிந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 42,055 பேர் வாக்களித்துள்ளனர். இது 14% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version